வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வெண்படலம் -1

உருண்டை வடிவம்,உருளும் உலகம்;
இருண்ட பயணம், இரவில் உலகம்;
கருத்த முகில்கள், கலங்கும் உலகம்;
அருமையான(து) இந்த உலகம்.



அண்ணாந்து பார்க்கும் உயரம்; தருகின்ற‌
தண்ணீரோ தித்திக்கும் தேனமுதம்;கார்க்கூந்தல்
பெண்களின் எண்ணெயின் மூலம்;கடற்கரை
வெண்மணலில் கண்டால் சுகம்.




இல்லை இவளுக்கு நீதி;இருப்பிடம்
சொல்லும் இவளுடைய சேதி;புராணத்தில்
மட்டும் கடவுளில் பாதி; உரிமைக்குச்
சட்டம்தான் பெண்ணின் கதி.




.....................................................

சிறுவர்களுக்கான‌ பாடல்களை
எளிய வெண்பாவில் சொல்லும் முயற்சி.

மனிதன்



தாவிக் குதிப்பதால்
தவளை என்னும் பெயராம்

நகர்ந்து செல்வதால்
நாகம் என்னும் பெயராம்

நாக்கின் இயல்பால்
நாய் என்னும் பெயராம்

குதித்து ஓடுவதால்
குதிரை என்னும் பெயராம்

கூவும் ஓசையால்
குயில் என்னும் பெயராம்

மனம் இருந்தால்தான்
மனம் இருந்தால்தான்
மனிதன் என்னும் பெயராம்

மார்கழித் திங்கள்



கொஞ்சி விளையாடும் கோகுலத்துக் கண்ணனைத்
தஞ்சம் அடைந்தாலே போதும் - மணிவண்ணன்
மஞ்சத்தில் பூங்கரத்தில் முத்தத்தில் வாய்ச்சொல்லில்
நெஞ்சம் நிறைந்தால்போ தும்





மகுவாய்ப் பிறந்தான், மகிழ்ச்சியைத் தந்தான்;
சுகந்தனாய் வந்தான், சுகத்தையெல்லாம் ஈந்தான்;
நகுலனாய் வாழ்ந்தான், நமையெல்லாம் வென்றான்;
முகுந்தனே முத்தமொன்று தா.

மார்கழிப் பொழுது



கண்ணனைக் கண்டால் கவலைகள் ஓடிடும்
கண்ணனைப் போற்றினால் குற்றங்கள் நீங்கிடும்
கண்ணனை எண்ணினால் இன்பங்கள் பொங்கிடும்
பெண்களே கண்விழியுங் கள்.




மாவாலே கோலமிட்டு மாதவனைக் கூப்பிடுவோம்
பாவாலே பண்ணிசைத்துப் பாலகனைக் கூப்பிடுவோம்
நாவாலே நாம்பாடி நாதனைக் கூப்பிடுவோம்
வாவா மணிவண்ணா வா.









நாராலே பூவும் சரமாகி மாலையாகும்;
நீராலே மேனி தரமாகி தூய்மையாகும்;
யாராலே ஆன்மா அமைதியாகி வாழும்;சொல்
நாரா யணின்நாமத் தை

கந்தா...



கந்தா! கடம்பா! குமரா! கருணையின்
மைந்தா! முருகா! முதல்வா! மலைநாட்டு
வேந்தா! வடிவேலா! வெற்றிவீரா! செந்தமிழ்ச்
சேந்தா! சரணமய் யா.

கண்ணா...



குழலென்றால் கண்ணன்; குறும்பென்றால் கண்ணன்;
நிழலென்றால் கண்ணன்; நினைவென்றால் கண்ணன்;
எழிலென்றால் கண்ணன்; எழுத்தென்றால் கண்ணன்;
தொழுதிடுவேன் கண்ணா உன்னை.

வார்த்தை முத்துகள் - 2





காதலே கவலை போக்கிடும் மருந்தாம்
கமகமக் கும்சுவை விருந்தாம்
காதலே மக்கள் வணங்கிடும் இறையாம்
கைதியாக் கிடும்மனச் சிறையாம்
காதலே உள்ளம் பேசிடும் மொழியாம்
கடவுளை அடைந்திடும் வழியாம்
காதலிப் போமே ஒவ்வொரு கணமும்
காதலால் இணைந்துநா மிருப்போம்

வார்த்தை முத்துகள் - 1




மந்திர மல்ல மாயமு மல்ல‌
மனத்திலி ருக்கிற தம்மா
தந்திர மல்ல தாயமு மல்ல‌
திறவுகோல் நம்மிட மம்மா
விந்தையு மல்ல வித்தையு மல்ல‌
விதைப்பவ ரிங்குநா மம்மா
அந்தியு மல்ல ஆதியு மல்ல‌
அன்பிலே இருக்கிற தம்மா

சித்திரை




இரட்டிப்பு சந்தோசம்,ஆண்டு
ஆரம்ப மாகிறதைக் கண்டு
சரிதானா சொல்லுங்கள்
வரலாற்றைப் படியுங்கள்
புரிந்தாலே அதுதான்புத் தாண்டு

புரிதல்...

இது எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் என் பா நூறு என்னும் நூலில் எழுதிய வரிகள்.
இதில் என்ன புதுமை என்றால் ஒரு கவிதையை இருவேறு வடிவங்களில் அதாவது புதுக்கவிதையிலும் மரபுக்கவிதையிலும் பார்க்க முடியும்.அவரின் வலைப்பூவில் இன்னும் பல அற்புதமான புதுக்கவிதைகளையும் மரபுக்கவிதைகளையும் படிக்கலாம்.



நான் புரிந்து கொண்ட‌
முதல் கவிதை - அன்னை

புரிய முயன்ற‌
கவிதை - அப்பா

புரிய முயன்று தோற்றுப் போன‌
கவிதை - மனைவி

புரியாமலேயே போன‌
கவிதைகள் - மக்கள்

நான் மட்டும் என்ன ?
புரிந்தும் புரியாத புதிர்தானே !



புரிந்த முதல்கவிதை பெற்றாள்; முயன்று
தெரிந்தவிடம் தந்தையே; தோற்றவிடம் இல்லாள்
புரியாமல் போன கவிதை புதல்வர்;
புரிந்தும் புரியாத நான்.