வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

அகிலாண்டம்


சிவனின் மனைவியாகிய பார்வதிக்குள்ள பல பெயர்களில் அகிலாண்டேசுவரி என்பதும் ஒன்றாகும். அகிலம்+அண்டம்+ஈசுவரி என்ற முச்சொற்களின் கூட்டே அகிலாண்டேசுவரி என்பதாகும்.அகிலம் என்பது வேற்றுமொழிச்சொல் ,அதுவே அகில் ( Akil அல்லது Ahil ) என்று சொல்லப்படதாகவும் கூறப்படும். தமிழ்நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள், அகில பாரத என்றும், அகில இந்திய என்றும் சொல்வதைக் காணலாம். அகிலம் என்ற சொல் , விரிந்த - பரந்த - எல்லாம் என்ற பொருளில் விரியும்.

அகிலாண்டம் - விரிந்து பரந்த உலகம்

அகிலாண்ட கோடி - எண்ணிலடங்கா உலகம் ( வானம், வீண்மீன்கள், கோள்கள் உள்ளிட்டவை )

அகண்டம் - விரிந்த பரப்பளவைக் கொண்டது.

கண்டம் x அகண்டம் என்ற எதிர்மறைப் பொருளில், அகண்டம் சொல்லப்பட வில்லை.

கண்டம் என்னும் தமிழ்ச்சொல்லே , குமரிக்கண்டம் என்று சொல்லப்பட்டதை நோக்குக.

கள் - காண் என்ற மூலத்தமிழ்ச்சொற்களிலிருந்து பல்வேறு சொற்கள் விரிந்துள்ளன.

கள் - காண் - காணி = கண்ணால் பார்க்கப்படும் நிலப்பகுதி

காண் - காட்சி = பார்வை, தோற்றம் என்றவாறு விரியும்

கண் - காண்டல் - காதல் = பார்வையால் பரிமாறப்படும் அன்பு

கண் - கண்ம - காண்மம் - காமம் = பார்த்த பின் விரும்புவது,விருப்பம்

கல் என்பதற்கு இடம், பகுதி என்ற பொருளும் உண்டு.

கல் - கண்டம் = விரிந்த பகுதி
அகண்டம் = மேலும் மேல் விரிந்த பகுதி

அட்டம் = அண்மையிலுள்ளவை
அகண்டம் = தொலையில்லுள்ளவை

அகண்டம் என்பது அகல் என்ற சொல்லின் நீட்சியே

அகல் = ஒரிடத்தை விட்டுச் செல்லுதல், விரிவடைதல்,எங்கும் பரவி நிற்றல் ( Leave, Increase,Spread etc )

அகல் - அகலம் = விரிவடைதல் ( Breadth , Width, Extension )

அகலிடம் = அகன்று விரிந்துள்ள உலகம்

அகல் - அகில் = எங்கும் பரவும் மணம்

அகல் என்னும் தமிழ் மூலச்சொல், அகில் என்னும் சொல்லப்பட்டது.

கல் = ஒரிடத்தில் நிலையாக நிற்பது, மலையைக் குறிக்கும்

அகல் = நிலையாக நிற்காமல் விரிந்து செல்வது

கல் x அகல் எதிர்மறைப் பொருள் தமிழில் சொல்லப்பட்டத்தை நோக்குக.

இன்னும் விரிவாக

கட்டு = ஒன்று சேர்

குச்சியைக் கட்டு, காலைக் கட்டு என்பதைப் பார்க்கவும்

அகட்டு = விரி

காலை அகட்டு = காலை விரி

கட்டு x அகட்டு தமிழிலும் எதிர்மறைப் பொருள் உண்டு என்பது உறுதியாகிறது.

அகல் - அகில் - அகிலம் = உலகம்

அகண்டம் - அண்டம் எனவும் சுருங்கும்

அண்டா = அகன்ற பாத்திரம்

அகிலம்+ அண்டம் = அகிலாண்டம் = பேரண்டம் ( Universe )

அகிலம் (உலகம் ) வட்ட வடிவமானது கோள வடிவமானது என்னும் கருத்தில், கண் என்ற உறுப்புடனும் இணைக்கப் பட்டது.

அதனால் தான் கண்ணுக்கு அக்கி என்னும் சொல்லும் வழங்கப்பட்டது.

அகிலம்,அண்டம்,கண்டம், காண்டம், அகிலாண்டம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச்சொற்களே. அவை சிற்சில ஒலிப்பு மாற்றங்களுடன் தமிழின் திரிமொழிகளில் திரிந்துள்ளன என்பதை உணர வேண்டும்.


( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை )

இது தொடர்பான இன்னொரு கட்டுரை ; கற்கண்டு

வண்ணங்களில் சில எண்ணங்கள்

( படித்ததில் பிடித்தது - அப்துல் இரகுமான் அவர்களின் வரிகள் )



வேடிக்கை யானவன்தான்
மனிதன் ! முரண்பாடே
வாடிக்கை அவனுக்கு
வண்ணத்தின் அருத்தங்கள்
வெவ்வேறு நேரத்தில்
வெவ்வேறு அவனுக்கு

சுதைவீடு பழசானால்
சுண்ணாம்பு கொண்டுவந்து
வெள்ளை அடித்துத்தன்
வீட்டைப் புதுப்பிப்பான்
சதைவீடு பழசாகும்
தருணத்தில் தலைநரைத்தால்
வெள்ளையின்மேல் கறுப்புநிறம்
விரும்பி அடிக்கின்றான்.


கறுப்பென்றால் துக்கத்தைக்
காட்டும் என்பான் ; கன்னியரின்
கறுப்பு விழிகண்டால்
களிப்புற்று ஆடுவான்.

சிவப்புநிறம் ஆபத்தின்
சின்னமென்பான் ; பெண்கன்னம்
சிவந்து தலைகுனிந்தால்
நாணத்தின் குறியென்பான்

மஞ்சள் நிறமென்றால்
மங்கல நிறமென்பான்
மஞ்சள்கா மாலைவந்தால்
மங்கலநோய் என்பதில்லை



மனப்பத் திரிக்கைக்கு
மஞ்சள் தடவுவான்; ஆம்
மனச்செய்தி அச்சடித்தால்
மஞ்சள்பத் திரிக்கையென்பான்.

பசும்புல்லைப் பூமியின்
பச்சை உடையென்பான்
உடையவிழ்க்கும் வருணையைப்
பச்சை எழுத்தென்பான்.



கரும்நீலம் காக்கும்
கடவுளின் நிறமென்பான்
உடல்நீலம் பாய்ந்துவிட்டால்
உயிர்நீங்கும் குறியென்பான்.

எந்தப் புரட்சி
எங்கே நடந்தாலும்
அந்தப் புரட்சிக்கு
அமைக்கின்ற பெயர்களெல்லாம்
வண்ணக ளால், அன்றோ
வைக்கின்றார் ; உலகத்தில்

செல்வம் பொதுவாக்கச்
சிவப்புப் புரட்சியென்பார்
பயிரின் வளம்பெருகப்
பசுமைப் புரட்சியென்பார்
வீடெல்லாம் பால்பெருக
வெள்ளைப் புரட்சியென்பார்



வளங்கள் இல்லையென்றால்
வாழ்க்கையில் அழகில்லை
எண்ணங்கள் இல்லையென்றால்
எதுவுமே இங்கில்லை.

இணைமொழிகள் - 1

" அக்கம்பக்கத்தைப் பாரு ? "

" அங்கும் தான் பிள்ளை குட்டி இருக்கிறது "

" ஏதாவது அடிதடி உண்டா ? "

" எவ்வளவு அடக்கம் ஒடுக்கமாக இருக்கிறது ? "

" நீயும் தான் இருக்கிறாயே "

இது இன்னும் இல்லங்களில் தாயிடம் இருந்து ஒலிக்கும் வசைமொழிகள்.

பெற்றோர் உறங்கிய உடன், அவள் அலுங்காமல் குலுங்காமல் அடி எடுத்து வைத்தாள்,சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சுவர் ஏறிக் குதித்தாள்.

இது கதைகளில் படிக்கும் உரைநடைமொழி.

தடித்த எழுத்தில் காணப்படும் வசைமொழியும், உரைநடைமொழியும் இணைமொழி என்று கூறப்படும்.

இன்னும் பேசும்போது " தாட்டு பூட்டு " என்றும் " குண்டக்கா மண்டக்கா " என்றும் இப்படி எல்லாம் சொல்கின்றோம். ஏதோ எதுகைமோனையுடன் விளம்புகின்றோம் என்று நினைக்க தோன்றுகிறது. உண்மையில் ஒவ்வொன்றிலும் அழமான நுட்பமான பொருள் உண்டு. வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம் தமிழில் வடிவம் பெற்று விடுவதில்லை.சிற்பி செதுக்கும் சிற்பம் போல செதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு செந்தமிழ்ச்சொற்களும் என்பதை சிந்தையில் கொள்ள வேண்டும்.

இணைமொழி என்றால் என்ன ?
இரு வேறுபட்ட சொற்கள் இணைந்து வருவது.
இணைவது என்றால் எப்படி ?
1.எதுகையால் இணைந்து வருவது
(எ-டு)
அக்கம் பக்கம்
அடிதடி

இவை தலையா கெதுகை எனப்படும். அதாவது முதல் (மோனை ) எழுத்து ஒத்திருக்க வேண்டும். இரண்டாம் எழுத்தும் ( எதுகை ) பிற எழுத்துகளும் அதே எழுத்தாக வர வேண்டும்.

2.உயிரின எதுகை
(எ-டு)
அடக்கம் ஒடுக்கம்
அலுப்பு சலிப்பு

இப்படி பல வகைகள் உள்ளன.


சில இணைமொழிகளை இங்கே பார்ப்போம்.

1.அறிகுறி

அறிகுறி என்பதை மேலொட்டமாக பார்த்தால் அடையாளம் என்னும் பொருள் அளிக்கிறது. இதை விரிவாக நோக்குவோம்.

அறி - ஒலி, மணம் ஆகியவற்றால் உண்டாகும் அடையாளம்
குறி - உருவத்தால் அல்லது தோற்றத்தால் உண்டாகும் அடையாளம்


வண்டி வரும் அறிகுறியே இல்லையே என நெடுநேரம் வண்டிக்குக் காத்துக் கிடப்பவர் கூறுவதைக் காணலாம். உண்மையில்
வண்டிவரும் ஓசையும் ( ஒலியும் ) இல்லை; புகை போன்ற தோற்றமும் இல்லை என்பதே இங்கே அழமான நுட்பமான பொருளாகும்.



மழைபொய்யும் அறிகுறியே இல்லை என்றால், இடிமின்னல் போன்ற ஒலியும்; மோடம், முகில் போன்ற தோற்றங்கள் இல்லை என்பதே இங்கே விரிவாக விளக்கமாக கூறப்படுகிறது.

2.கிய்யாமிய்யா

அவன் பேச்சா பேசுகிறான் ? கிய்யாமிய்யா என்கிறான் எனப் பழித்துச் சொல்லுவதுண்டு.

இங்கே

கிய்யா - குருவிக்குஞ்சின் ஒலியாகும்
மிய்யா - பூனைக்குட்டியின் ஒலியாகும்.

ஒன்றை ஒருவனிடம் கேட்க அதற்கு விளக்கமாகவும் , தெளிவாகவும் கூற முடியாமல் மருண்டு பேசுவதைக் கிய்யாமிய்யா என்பது வழக்கம்.
குருவிக்குஞ்சும்,பூனைக்குட்டியும் எவற்றையோ கண்டு அஞ்சி ஒலிப்பது போல இவனும் அஞ்சி ஊறுகிறான் மற்றும் பொருள் புலப்பட வண்ணம் பேசுகிறான் என்பதை விளக்குவதே இந்தக் கிய்யாமிய்யா .

3. சண்டைசச்சரவு

சண்டை - மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு
சச்சரவு - மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு

வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு அளவில் நடப்பது போர் என்றும் அழைக்கப்படும்.
சண்டையில் பெரும்பாலும் கருவிகள் பயன்படுத்தப்படாது, அதனால் சண்டை என்பது கைகலப்பு என்று கூறப்படும்,சிலர் கைகலப்பு இன்றி வாய்கலப்பிலும் ஈடுப்படுவதுண்டு, இரண்டையும் இணைத்துப் பார்த்தே " சண்டை சச்சரவு போடாதீர்கள் " என்று சொல்லுவதுண்டு.

இப்படி எத்தனையோ உள்ளன். அதற்கு ஒவ்வொன்றுக்கும் அழமான அழகான நுட்பமான பொருளுண்டு.இதைப் பற்றி விரிவாக விளக்கமாக
புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் இணைச்சொல் அகராதி என்னும் நூலில்
எழுதியுள்ளார்.

(தொடரும் )

முறையான உச்சரிப்பு முறை - 1

( புத்தகத்தைப் படிப்பதே அரிதாகும் இக்காலத்தில், இணையத்தில் வாயிலாக எதையும் அறிந்து கொள்ளும் போக்கு
உள்ளமையில் இக்கட்டுரையை இங்கே வடிவம் பெற்றுள்ளது.)

உச்சரிப்புக்கு முதன்மையாய் உள்ளது வாய். வாயில் பலவேறு பகுதிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை.

நா(க்கு)
பற்கள்
உதடுகள்
அண்ணம்
ஈறு
உள்நாக்கு முதலியன.

அண்ணம் என்பது, வாயில் அரைவட்டமாக உள்ள மேல் பகுதி. இந்த அண்ணத்தை மூன்று பகுதிகளாகக் கூறலாம். மேல் முன் பற்களுக்கு அருகில் உள்ளது நுனி அண்ணம்; அண்ணத்தின் இடைப்பகுதி நடு அண்ணம்; நடு அண்ணத்துக்கும் உள் நாக்குக்கும் இடைப்பட்ட அடி அண்ணம். முதலில் இவற்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.

உச்சரிப்பில் நுணுக்கமான வேறுபாடுகளை உடைய எழுத்துகள் சில உள்ளன. அவ்வெழுத்துகளை மூன்று தொகுதிகளாக இங்கு எடுத்துக் கொள்வோம். அவை;

(அ) ல, ழ, ள
(ஆ)ண, ந, ன
(இ) ர, ற என்பன.

முதலில் ல, ள, ழ - இவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேல்வாய்ப் பல்லின் அடியை, நுனிநா தொட்டுப் பொருந்த வேண்டும். நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல்வாய்ப் பற்களின் அடியைப் பொருந்த வேண்டும். அப்பொழுது வருவது " ல் " . அவ்வாறு பொருந்தி (நா(க்கு))ப் பெயர்ந்தால் வரும் ஒலி " ல " படத்தைப் பாருங்கள்.



(எ-டு)
கல்,பல்,பல,நலம்,பலப்பல,அல்லல்,வல்லவன்,நல்லார்,மலை,
பல்லி,பல்லெல்லாம்.


இதனையடுத்து " ள " என்னும் எழுத்தை எப்படி உச்சரிப்பது என்பதையறிவோம்.

நுனி நா(க்கு)ச் சற்று மேல்நோக்கி வளைந்து அண்ணத்தின் (மேல்வாயின்) நடுப்பாகத்தை அல்லது அதற்குச் சற்றுக்கீழ் தடவுதலால் " ள " வரும். நா தடவாமல் அப்படியே பொருந்தி நின்றால் அதன் மெய்யெழுத்தாகிய " ள் " வரும். ஒலித்துப் பாருங்கள்.





(எ-டு)
பளபள,வளம்,கள்,பள்ளம்,உள்ளே,தள்ளு,பிள்ளை


" ழ " இந்த எழுத்து தமிழுக்கே சிறப்பான எழுத்து. பல மொழிகளில் இந்த எழுத்து - ஒலி இல்லை.இதனைச் சரியாக உச்சரிப்பதில் பலர் இடர்ப்படுகிறார்கள். முறையைத் தெரிந்து கொண்டால் உச்சரிப்பது எளிதாகிவிடும்.

நாவின் நுனி மேல்நோக்கி (உள்நாக்கை நோக்கி) வளைந்து, சிறிது வருடி (தடவி)னால் " ழ " வரும். நா பொருந்தினால் அதன் மெய்யெழுத்தான " ழ் " வரும். இவ்வெழுத்தைப் பலமுறை உச்சரித்துப் பாருங்கள்.





(எ-டு)
பழம்,விழா,கூழ்,ஏழை,எழில்,உழுதொழில்
" ஏழைக் குழந்தை வாழைப்பழத்துக்கு விழுந்து விழுந்து அழுதது " என்னும் இத்தொடரைப் பலமுறை சொல்லிச் சொல்லிப் பழகுங்கள். " ழ " கரம் உங்கள் நாவில் ஒழுங்காகத் தவழும்.

"ல"வின் பின், "ள", அதன் பின்னர் "ழ" என்னும் முறையில் இம்மூன்று எழுத்துகளும் வரும் என்பதை நினைவில் கொண்டால் உச்சரிப்புச் சீராய் வரும்.

ல, ள, ழ - என்னும் இவ்வெழுத்துகளையும் இவற்றின் இன எழுத்துகளையும் கொண்ட சில சொற்களும் அவற்றின் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது நல்லது.

பலம் - சத்து , வலிமை ( ஒரு பலம் - முன் வழக்கில் இருந்த நிறுத்தல் அளவை )
பழம் - கனி, மூத்தது, முதிர்ந்தது

வலம் - வலப்பக்கம்,வெற்றி
வளம் - மிகுதி,அழகு,செல்வம்,செழுமை

விலா - வயிற்றின் பக்கப் பகுதி
விளா - விளாமரம்
விழா - திருவிழா

வலி - நோய்,வல்லமை,இழு(த்தல்)
வளி - காற்று
வழி - பாதை,இடம்,காரணம், மிகுந்து வடி(தல்)

விலை - பொருளின் மதிப்பு
விளை - உண்டாக்கு, ஏற்படு
விழை - விரும்பு,வேண்டு,பழகு

கொழு - கொழுத்தல், கொழுப்பு
கொளு - கருத்து,பொருத்தும் கருவி
கொலு - கொலு வைத்தல், கொலு வீற்றிருத்தல்

வால் - விலங்குகளின் வால், தொங்கும் உறுப்பு
வாள் - வெட்டும்/அறுக்கும் கருவி, அரிவாள்
வாழ் - பிழைத்திரு,உயிர்வாழ்

இவ்வாறு பல சொற்கள் உள்ளன. அவற்றின் எழுத்துகளும் உச்சரிப்புகளும் மாறுபடுவதால் பொருள்களும் மாறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படிப் பொருள் வேறுபடும் சில வாக்கியங்களையும் காண்போம்.

(எ-டு)
தவலை கிணற்றில் விழுந்தது.
தவளை கிணற்றில் விழுந்தது.

முன்னது " தவலை " - அதாவது நீர்க்குடம் கிணற்றில் விழுந்தது என்றும், பின்னது " தவளை " - நீர்வாழ் உயிரினம் ஒன்று நீரில் குதித்தது என்றும் பொருள்படும்.

தலையை வெட்டினான்.
தழையை வெட்டினான்.

இவற்ற்றில் முன்னது உடல் உறுப்பாகிய " தலையை " வெட்டினான் என்னும் பொருளையும், பின்னது " தழையை " - அதாவது தாவரங்களின் இலையை வெட்டினான் என்னும் பொருளையும் உணர்த்தும். உச்சரிப்புத் தவறானால் பொருளே வேறுவிதமாய்ப் போய்விடுகிறதல்லவா ? இப்படிப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம்.

ல, ள, ழ - இம்மூன்று எழுத்துகளின் முறையான உச்சரிப்பையும், அவ்வெழுத்துகளாலாகும் சொற்களைத் தவறாக உச்சரிப்பதால் ஏற்படும் பொருள் மாற்றத்தையும் அறிந்தோம்.



( முனைவர்.தி.முத்து - கண்ணப்பன் அவர்கள் எழுதியது )

( தொடரும் )

தமிழும் தமிழன்பன் அவர்களும்

(படித்ததில் பிடித்தது - ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை வரிகள் )



சீர்நிறைந்த அளவடியும் சீர்கு றைந்த
சிந்தடியும் வெண்பாவில் சேர்ந்தி ருக்கும் !
பாரினிலே நிதிநிறைந்தோர் அதுகு றைந்தோர்
பக்கத்தில் இருப்பதற்குச் சரியென் பாரா ?



முரண், பாட்டில் நயஞ்செய்யும் !
முன்னேறும் நாடோ
முரண்பாட்டில் தேய்ந்தழியும் !



ஒலிகுறைந்த உகரமுயிர் எழுத்துத் தான்ஓர்
ஒற்றெழுத்தாய் மாறாது ! " சந்த னக்கோல்
மெலிந்தாலும் சந்தனத்தான் ! பிரம்பா காது ! "
மேலோர்கள் கொட்டாலும் மேலோ ரேதாம் !




மொழிமுதலில் இடைகடையில் ஒலிகு றைந்தால்
முன்வந்து நெட்டெழுத்தே அளபெ டுக்கும் !
பழிவந்து தன்னினத்தின் புகழ்கு றைந்தால்
பைந்தமிழன் பேராண்மை தலையெ டுக்கும் !




அருங்கவியின் உயிரில்லா எழுத்தை எண்ணி
அலகிடுதல் இலக்கணத்தார் வழக்க மில்லை !
பெருமானம் அற்றவரை எண்ணிப் பார்க்கும்
பிழைச்செய்ல்கள் நுழைபுலத்தார் செய்வ தில்லை !
வருபாட்டில் அசைச்சொல்போல் பயனி ழந்து
வாழ்வதுமோர் வாழ்லாமோ ?

மகளே ! மடியில் வந்து தவழ்ந்திடு !



கொஞ்சும் குரலழகு ! மிஞ்சும் எழிலழகு !
துஞ்சும் ஒயிலழகு ! கெஞ்சும் இதழழகு !
இத்தனையும் காண துடிக்கிறது ! இன்னும்
எத்தனைநாள் சொல்மக ளே !






மடியில் தவழ்ந்திடு என்மகளே ! இங்கே
இடியாய் விழுகிறது வார்த்தைகள் எல்லாம்,
அகமோ அழுது துடிக்கிறது உந்தன்
முகம்காணத் தான்மக ளே !





பெண்ணாய்ப் பிறப்பது மாதவமாம்! இம்மண்ணில்,
கண்ணாய் ! மணியாய் ! நதியாய் ! மொழியாய் !
கதைக்கிறது பெண்ணை, இருந்தும் அவளை
வதைக்கிறது இன்னுமிங் கே !






மணந்த உடனே கருத்தரிக்க வேண்டுமாம்
கண்ணே ! இ(ல்)லையெனில் கண்ணீர்த்தான் - மங்கைக்கோ
இங்கே மலடியெனும் பட்டம்,மணந்த
சிங்கமோ மார்த்தட்டிக் கொண்டு.






( நன்றி அகரம் அமுதா அவர்களே )

வேடிக்கையான வெண்பா

( படிக்கவும், சிரிக்கவும் மட்டும் )

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் - உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.




( படித்ததில் பிடித்தது - சுசாதா அவர்கள் எழுதியது )