வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வண்டும் தமிழும்



தொளைத்துச் சொல்லும் இயல்பு காரணமாக வந்த பெயர் இது. பழம், மலர் முதலியவற்றைத் தொளைப்பது வண்டு.வள் என்னும் வேருக்கு தொளை, தொளைத்தல் என்ற பொருள் உண்டு.

ப்ரியன் அவர்கள் காதலை வண்டாக வடிவம் கொண்டு வரைந்திருக்கும் வரிகள் பாருங்கள்.

நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!

காதல் என்னும் வண்டு இதயத்தில் நுழைந்து புரியும் செயலைச் சொல்லும் சுகமே தனித்தான்.

1) ஓரறிவு-புல்லும்,மரமும் (நகர முடியாதவை).
2) ஈரறிவு-சிப்பி, சங்கு (நகர கூடியவை ).
3) மூவறிவு- கரையான், எறும்பு (பறக்க முடியாதவை ).
4) நாலறிவு- தும்பி,வண்டு (பறக்க கூடியது).
5 )ஐந்தறிவு- மிருகம் (கண்டு,கேட்டு, உண்டு, வாழும் ).
6)ஆறறிவு- மனிதன் ( பகுத்தறிவு உடையவன் ).

என்று அறிவை ஆறாகப் பிரித்து வண்டை நான்கறிவு உயிர் என்றுசொல்லுவதைக் காணும்பொழுது அகம் மகிழ்கிறது.ஆனால் மனிதன் செய்யும் செயலை நோக்கும்பொழுது அவனை ஓரறிவு உயிரைவிட தாழ்த்துகிறது.

கிராமங்களில் தென்னை அல்லது பனை மரத்திலிருக்கும் கொடிய வண்டை கதண்டு என்று கூறுவதுண்டு.

அரிசி, பருப்பு போன்ற பொருளில் வண்டு,பூச்சி வராமல் இருக்க ஓன்று / இரண்டு கிராம்பு போட்டு வைப்பது வழக்கம்.

"
தேனுகர் வண்டு மதுதனை யுண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று
தடங்கையா லெடுத்துமுன் பார்த்தாள்
வானுற்ற்மதியும் வந்ததென் றெண்ணி
மலர்க்கரங் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
புதுமையோ விதுமெனப் புகன்றாள். "

என்னும் இந்தப் பாடலில் வண்டுகளைக் கொண்டு ஒரு விளையாட்டே விளையாடி இருப்பதை கண்டுக் களிக்கலாம்.

வளியும் தமிழும்




வெட்டவெளியைத் தொளைத்துக் கொண்டு சொல்வதால், காற்றுக்கு வளி என்று பெயர். ஓரிடத்திலேயே மண்டிக்கொண்டு புகை போலக் காற்று நிற்பதில்லை.வள் என்னும் வேருக்கு தொளை, தொளைத்தல் என்ற பொருள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வளியைக் கொண்டு வரைந்துக் கொண்ட சொற்கள் தாம் சூறாவளி,கடுவளி. சூறாவளி என்பது புயல் காற்றைக் குறிக்கும்.கடுவளி என்பதும் புயல் காற்றைக் குறிக்கும் மற்றொரு சொல்.

வளி என்ற உடன் நினைவிற்கு வரும் வள்ளுவரின் இரண்டு குறள்கள் தாம்.

முதல் குறள்;

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி. ( குறள் எண் : 245 )

இந்தக் குறளுக்கு கலைஞர் அவர்களின் விளக்கவுரை இன்னும் அழகு சேர்க்கும்.கீழே உள்ள பொருளைக் காணுங்கள்.

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

இரண்டாவது குறள்;

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (திருக்குறள்-941)

நூலோர் சொல்லும் காற்று ,பித்தம், கோழை என மூன்று மிகுந்தாலும் குறைந்தாலும் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகும். என்பதை இந்தக் குறளில் குறிப்பிடுவார்.

ஐம்பெரும் பூதங்களில் வளியும் ஒன்று என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர்

"மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் " என்று இயம்புவார்.

வளி என்ற உடன் நினைவிற்கு வரும் இந்த கவிதை தான்.

விழிமொழியாளே
விரைந்து
வழி ஒன்று
விளம்பு இல்லையெனில் என் உயிர்
வளி நின்று விடும்.

காதலி இடம் கடிதம் கொடுத்த விடைக்காக விரைந்து காத்திருக்கும் காதலன் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

வளி என்பதை " Gas " என்னும் சொல்லுக்கு இணையான சொல்லாக இயம்புகிறோம்.

தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறும் சொல்லில் அந்தச்சொற்களில் இந்த வளியும் ஒன்று.

வலி - pain
வளி - Gas
வழி - Path

வள்ளமும் தமிழும்



வள் என்னும் வேருக்கு தொளை, தொளைத்தல் என்ற பொருள் உண்டு. இந்த வேர்ச்சொல்லில் இருந்து எண்ணற்ற கிளைச்சொற்கள் தமிழில் முகிழ்த்துள.அதிலிருந்து
பிறந்த சொல் தான் வள்ளம் என்னும் சொல்.

தோணியில் ஒரு வகை. நடுவே தொளைக்கப்பட்ட பகுதியை உடையது என்ற பொருளில், வள் என்ற வேர் இந்தச் சொல்லைத் தந்துள்ளது.

கம்பர் வள்ளம் என்பதைக் கிண்ணம் அல்லது கோப்பை என்னும் பொருள் குறிப்பிடுவார். பின் வரும் இரண்டு பாடல்களைக் காண்க.

"பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும், ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்,
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார்."

இங்கே பளிக்கு வள்ளத்து - பளிங்குக் கிண்ணத்தில் என்று பொருள் படும்.

" கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி,
'உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள், வெம்மை நீங்கி,
தண் மதி ஆகின், யானும் தருவென், இந் நறவை' என்றாள் "

மணி வள்ளத்துள்ளே - மணிகள் பதித்த கிண்ணத்தில் என்பது பொருள்

இன்னும் சொல்வது என்றால் திருமுறையில் வள்ளம் என்பது கிண்ணம் பொருளில்

" விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனு முயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி யம்மா வெங்ஙனங் காணு மாறே."

வருவதைக் காண முடிகிறது.

கொங்குப் பகுதியில் அரப்பு , பருப்பு முதலியவற்றை படி என்னும் அளவைக் கொண்டு தான் வாங்குவார்கள் .

எடுத்துக்காட்டாக

நான்கு படி என்பதை ஒரு வள்ளம் என்றும்,
இரண்டுபடி என்பதை ஒரு பக்கா என்றும் விளம்புவது வழக்கம்

புறவிறக்கமும் அகவேற்றமும்




வாழ்க்கையில் ஏற்றமடையும்பொழுது மகிழ்கின்றோம். வாழ்க்கையில் இறக்கம் ஏற்படும்பொழுது கலக்கமடைகின்றோம். துன்பத்தைக் கண்டு துவண்டுவிட்டால் இறக்கங்களே என்றும், இலக்கைக் கொண்டு துணிந்துவிட்டால் ஏற்றங்களே என்றும் நினைக்க வேண்டும். ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று எண்ணினால் ஏமாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

இனி ஏற்றம் மற்றும் இறக்கம் கொண்டு உருவான சொற்களைக் காண்போம்.

இன்றைய பொருளியல் நிலையில் வேலையும் விலை உயர்வும் வயிற்றைக் கலக்குகின்றன என்பது உண்மை. விலை என்ற உடன் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

உலகத்தில்
உயர்ந்தவர் யார் என்று
விவாதம் நடந்ததது, இறுதியில்
விலைவாசி தான்
வெற்றியும் பெற்றதது.

ஆம். இந்த விலையில் விளையும் விளைவுகளைக் கொண்டு ஏற்பட்ட சொற்கள் தான் . விலையேற்றமும், விலையிறக்கமும்

ஒரு பொருளை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்றுமதி என்றும், அதுவே தேவைப்பட்டால் வாங்கிக்கொள்ளுவதற்கு இறக்குமதி என்றும் வகுத்துக் கொண்டோம்.

இன்றைய இணைய உலகில் எங்கு நோக்கினாலும் " Download " என்னும் சொல்லை இயம்ப கேட்கின்றோம். "Download " என்பதற்கு பதிவிறக்கம் , தரவிறக்கம் என்னும் சொற்கள் வலம் வரக் காண்கின்றோம். இன்னும் புதுமையாக " புறவிறக்கம் " என்னும் சொல்லையும் விளம்ப காணலாம்.
அது என்ன " புறவிறக்கம் " ?

உணவை அகத்தே ஏற்றி, செரிமானமான பின் புறத்தே கசடாக வெளியே வருவது போல், நமக்குப் பிடித்த பாடலை , படத்தை இணையத்தளத்திலிருந்து கணினிக்கோ அல்லது கைப்பேசிக்கோ "Download " செய்வதைத் தான் "புறவிறக்கம் " என்னும் பொழுது உள்ளம் உவகை கொள்கின்றது.

நம்முடைய புகைப்படங்களையும் , காணொளிகளையும் ( Videos) இணையத்தளத்தில் ஏற்றி வைப்பதை " அகவேற்றம் "
( Upload ) என்கின்றோம்.

சொல் அகராதி


1 upload - அகவேற்றம் ,பதிவேற்றம், தரவேற்றம்
2.computer - கணினி
3.download - புறவிறக்கம், பதிவிறக்கம் , தரவிறக்கம்
4.photo - ஒளிப்படம் , நிழல்படம் , புகைப்படம்
5.video - ஒளிதம், காணொளி
6.happy -மகிழ்ச்சி,உவகை,களிப்பு
7.cell phone - கைப்பேசி, செல்பேசி, அலைப்பேசி
8.Intetnet - இணையம்
9.Web site - இணையத்தளம்
10.Export - ஏற்றுமதி
11.Import - இறக்குமதி

சொல்லும் நுட்பப் பொருளும்

ஒரு சொல்லைப் மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பொதுப் பொருள்தான் தெரியும். இருப்பினும் அதிலுள்ள நுட்பப் பொருளை அகராதியைக் கொண்டு அறிந்துக் கொள்ள முடியாது.
மொழியொடு கலந்துப் பழகும் மக்களிடமிருந்துதான் அதன் மணத்தை நுகர முடியும்.புத்தகங்கள் என்பவை பாதை தான் காட்ட முடியும் .அதில் பயணிக்க வேண்டுமெனில் பட்டறிவு என்பது
தேவையானது ஒன்றாகும்.

நுட்பப் பொருளை மொழியாக்கம் செய்ய விழைக்கின்றவர்கள் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது ஒன்றாகும்.மரத்திலிருந்து கிளைகள் பிரிந்துச் செல்லுவதைப் போல் வேர்ச்சொற்களிலிருந்து சொல்லைத் திரித்து பல புதியச் சொற்கள் உருவாக்குவதற்கு உதவும்.

இருத்தல் என்னும் சொல்லை , மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, அது " உள்ளது " என்னும் பொதுப் பொருளைத்தான் தரும்.உற்று நோக்கினால் பல நுட்பப் பொருள்கள் உள்ளதை உணர முடியும்.

1.இருத்தல் - பொறுத்தல்
கொஞ்சம் இரு. பறக்காதே
இரு இரு எல்லாம் நடக்கும்.

2.இருத்தல் - உட்கார்தல்
நீங்க இருக்கையில் இருங்க, நான் நிற்கிறேன்.

3.இருத்தல் - தங்குதல்
அம்மா வீட்டில் நீ இருக்கக் கூடாது.

4.இருத்தல் - வாழ்தல்
நல்ல இரு தாயே

5.இருத்தல் - தொடர்பு இருத்தல்
உனக்கும் எனக்கும் என்ன இருக்கிறது ?

6.இருத்தல் - பணி புரிதல்
அந்தக் கடையில் கொஞ்ச நாள் இருந்தேன்.

7.இருத்தல் - பழகுதல்
என்னுடன் அவன் நன்றாகத் தான் இருந்தான்.

8.இருத்தல் - நடந்து கொள்ளல்
இனியாவது ஒழுங்க இரு.

9.இருத்தல் - ஆண் பெண் புணர்வு
இருந்துவிட்டுக் குளிக்காமல் வரக் கூடாது.

இத்தனை நுட்பப் பொருளை அகராதியில் அலைந்துத் தேடினாலும் உங்களுக்கு கிடைத்து விட முடியாது. அகராதி இவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும் , அப்பொழுதுதான் பயன் உள்ளதாக இருக்கும். புதியச் சொற்களைப் படைப்பதற்கும் எதுவாக இருக்கும்.
மேற்கண்ட சிறப்பு தமிழுக்கு உரித்தானது. இதைக் கொண்டு ஆயிரம் ஆயிரம் சொற்களை உருவாக்க அறிஞர்கள் மட்டுமல்ல தமிழ் மேல் பற்றுள்ள பண்பாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பதே என்னுடைய அவா.


(இது முனைவர் சு.செளந்தரபாண்டியன் அவர்களின் கருத்தைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரையாகும்.)

பிலம்

மக்கள் மிகுதியாக புழங்காததொரு தமிழ்ச் சொல், " பிலம் " என்பது. இதற்குச் சுரங்கம், குகை என்பது பொருள்.




" திருமால் குன்றத்துச் செல்கு விராயின்
பெருமாள் கெடுக்கும் பிலமுண்டு "

-சிலப் .காடுகாண்.,(91-92)

என்பது இளங்கோவடிகள் வாசகம்.

கோவலன், கண்ணகி, கவுந்தி மூவரும், உறையூரிலிருந்து மதுரை நோக்கிச் செல்கிறார்கள். வழியில், பாண்டி நாட்டிலிருந்து திருவரங்கப் பெருமானை வணங்கவரும் மாங்காட்டு மறையோன் ஒருவனைச் சந்திக்கின்றார்கள். பாண்டியர் பெருமை, பாண்டிநாட்டிப் பெருமை பற்றியெல்லாம் அம்மறையோன், கோவலன் முதலானோரிடம் கூறுகிறான். அப்பொழுது, மதுரை செல்லும் வழியுரைக்கும்போது மலவன் குன்றம் வரும் என்றும், அக்குன்றத்தில்
" பிலம் " ஒன்று உள்ளது என்றும், அப்பிலத்துள் மூன்று பொய்கைகள் உள்ளன என்றும் கூறுகின்றான்.

கம்பராமாயணத்திலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது.சிறைபட்டிருக்கும் சீதையை வானரங்கள் தேடுகின்றன்; குகை ஒன்றிற்குள்ளும் சென்று தேடுகின்றன். இதனைக் கம்பர்,
" பிலம் புக்கு நீங்கு படலம் " என்ற பகுதியிற் சொல்வார். மண்ணிற்குள் ஆழமாய்ச் சென்றிருக்கும் குகையை இப்பிலச்சொல் எவ்வாறு குறித்தது ?

தமிழில், " புல் " என்பதற்குத் துளை என்பது பொருள். பச்சைநிறப் புல்லும், அது துளையுடையதாய் இருப்பதனாலேயே அப்பெயரைப் பெற்றது. புல் என்னும் இத்துளைப் பொருள் வேர்ச்சொல்தான், புல்-புலம் எனத் துளையுடைய குகையைக் குறித்துப், பின் புலம்-பிலம் எனத் திரிவதாயிற்று. கால்நடைகள் உண்ணப் பயன்படும் புல், பேச்சு வழக்கில், பில்-பில்லு எனத் திரிவது காணலாம். இங்கு உகரம் - இகரமாக மாறியுள்ளது.

சில இடங்களில், மொழியில் மூலவழக்கினும், அதிலிருந்து திரிந்த அடுத்தகட்ட வழக்கே செவ்வழக்குத் தகுதியைப் பெற்று விடுவதுண்டு. புய் - என்பதிலும் பிய் என்பதே இன்று செவ்வழக்கு.

புய் - பிய் போலவும், புல் - பில் போலவும், உகர - இகரத் திரிபில், புல் - புலம் -பிலம் என்பதாகவே இக் குகைச்சொல் தமிழில் தோன்றியது.

(முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் தமிழறிவோம் (தொகுதி - 2 ) என்னும் நூல் இருந்து )

குகைப் பாதை, சுரங்கப் பாதை என்னும் சொற்களுடன் பிலப்பாதை, பிலச்சாலை என்கின்ற புதியச்சொற்களை உருவாக்க முடியும்.

இல்லையெனில் புலப்பாதை, புலச்சாலை என்றும் சொல்லாக்கம் செய்யமுடியும்.

1.underpass - புலவழிச்சாலை (கீழே உள்ளப் படத்தைப் பார்க்க)

2.outer ring road - புறவழிச்சாலை (கீழே உள்ளப் படத்தைப் பார்க்க)






சொல் அகராதி


1.பிலம் - குகை , சுரங்கம் - cave



2.underpass - புகுவழிப்பாதை, புலவழிப்பாதை

3..outer ring road - புறவழிச்சாலை

landmark - நிலவரை

"landmark " என்றால் என்ன ? அகராதியைப் பார்த்தால் " நிலக்குறியீடு " என்று பொருள் கூறுகிறது.ஓரளவு நன்றாக இருந்தாலும், உயர் அளவை இது எட்டிப் பிடிக்கவில்லையே என்று
எண்ணத் தோன்றுகிறது.இந்தக் குறளைக் காணும்பொழுது மகிழ்ச்சியில் மனம் திழைக்கிறது.

" நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு."

"நிலவரை " , " நீள்புகழ் " , " புலவர் " என்னும் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தால்,புதுப் புதுப் பொருள்கள் அரும்புவதைக் காணலாம். நீள்புகழுக்குரிய பெரும்புலவர் வள்ளுவர் " நிலவரை " என்னும் சொல்லை நமக்கு அருளியுள்ளார். அதுதான் landmark ஆகும்.

( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

" வரை " சொல்லைக் கொண்டு வரையும் சொற் தொடர்கள் எத்தனை என்று எண்ணிப் பாருங்கள்.


" வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ? "




"கடைசி தமிழன் உயிருடன்
இருக்கும் வரை
இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். "



" மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது "

இந்த " வரை" என்னும் சொல்லைக் கொண்டு வரைந்த சொல் தான் " நிலவரை ".

இந்த " நிலவரை" என்னும் சொல்லுக்கு இதைவிட யாரும் பொழிப்புரை தர இயலாது.








சொல் அகராதி


1.landmark - நிலவரை

maiden attempt - கன்னி முயற்சியா ?




" maiden attempt " என்பதற்குக் " கன்னி முயற்சி " என்று ஒருவர் எழுதி முடித்தார் ! கன்னியர் இம்மொழிபெயர்ப்பைக் கண்டு களிப்பெய்த மாட்டார்கள் என்பது திண்ணம் !
" முதல் முயற்சி " என்று சொன்னால் தான் ஒத்ததாகவிருக்கும். " கன்னிப்போர் " என்று கம்பன் குறிப்பிட்டிருப்பதால் " கன்னி முயற்சி " நல்ல தமிழாக்கமே என்று ஒரு நாளேடு கருத்துத் தெரிவித்துள்ளது.இடத்திற்கேற்பச் சொற்களை அமைப்பதே நல்ல மொழிபெயர்ப்பாகும். " கன்னிப் போர் " பொருந்துமேனும் " கன்னி முயற்சி " பொருந்தாது ! சிறிது சிந்தனை செய்யவேண்டும் !


( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

சொல் அகராதி


1.maiden attempt - முதல் முயற்சி

கட்டுப்பாடு யாருக்கு தான் பிடிக்கும்

" குடும்பக் கட்டுப்பாடு" என்னுஞ் சொற்களைக் கேட்டவுடனேயே நாம் குறுநகை புரிவோம். " Family Planning " என்பதற்கு இது மிக நல்ல மொழிபெயர்ப்பு. நீண்ட நாட்களாகப் பழகிப்போன மொழிபெயர்ப்பு எனினும் இதற்குக் கூட நாம் இன்று மெருகு கொடுக்கத் தொடங்கியுள்ளோம். " கட்டுப்பாடு " என்னுஞ் சொல் நமக்கு அடியோடு பிடிக்காதல்லவா ?

" குடும்பக் கட்டுப்பாடு " என்பதைவிடக் குடும்பநலம் என்னுஞ் சொற்கள் நயமாகவிருக்குமென, நாம் இன்று நினைத்து, அவற்றைப் பயன்படுத்தி வருகின்றோம். " குறைந்த குழந்தை நிறைந்த இன்பம் " என்பதுதான் குடும்ப நலத் திட்டத்தின் உணர்ச்சியொலியாகும். கொஞ்சுங் குழந்தை குறைவாய் இருந்தால் குழலும் யாழும் தோற்கும் நிலையைக் காணலாம்.


( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

சொல் அகராதி


1. Family Planning - குடும்பநலம்

கள் மயக்கம் -1

வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா என்பது இன்னும் பலரை மயங்க செய்வது.
இதற்கு என்று ஒரு விதி இல்லாத காரணத்தால் நினைத்த படி எழுதுகின்றோம்.
இதைப் பற்றிய ஒரு பதிவு தான் இது.

கள் மயக்கம் என்றயுடன் நினைவிற்கு வருவது வாரியாரின் வரிகள்தான்.


கள் குடித்தால்தான்
போதை வரும் என்பதில்லை.
கள் என்று வாயால்
சொன்னால் கூட பலருக்கும்
மயக்கம் வந்துவிடும்.
நீ என்று ஒருமையில்
அழைப்பதற்கு பதில்
நீங்கள் என்று பன்மையில்
அழைத்துப் பாருங்கள் .உடனே
அவர் மயங்கி போவார்.
அதற்கு காரணம் நீங்கள் என்ற
சொல்லின் இருக்கும்
கள் தான்

மரியாதை கூட மனிதனை மயங்க வைக்கிறது.
மட்டுமல்ல உள்ளத்தையும் உவகை கொள்ள வைக்கிறது.

கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2

கிறுக்கல் என்று சொல்லிக்கொண்டு சிலர் எழுதி இருப்பதைப் பார்க்கும்பொழுது, இவர்கள் எல்லாம் இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள் என்று தான் எண்ணத் தோன்றும் .அதோ அவர்களின் கிறுக்கல் என்று அழைக்கும் கவிதைமழையில் நனைந்துக்கொண்டு, சில சொற்களையும் கற்றுக்கொள்ளவும்.

காதலர்தின கிறுக்கல்கள் என்னும் தலைப்பில் யாழ் அகத்தியன் எழுதி இருக்கும் வரிகளைப் படித்துப் பாருங்கள்.

நீ பேசாமல் நின்றாலும்
பேசிக்கொண்டேதானே இருக்கிறது
இன்னும் என்னோடு உன் கண்கள்

இவ்வளவு கிட்ட வந்தபின்னும்
தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள்
தப்பா நினைக்க போறாங்க நாம்
நல்ல நண்பர்கள் என்று

உனக்கு முத்தம் கொடுக்க சொல்லி
சொன்னதே உன் கண்கள்தான் கொடுக்கும்
போதும் எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?

நல்ல காலம் உன் கண் பேசும்
வார்த்தைகள் யாருக்கும் புரிவதில்லை
இல்லையேல் திட்டும் போதும் நான்
சிரித்துக் கொண்டே இருப்பதை
கண்டு பிடித்திடுவார்கள்

உனக்கான கவி நடையில்தான்
என் எழுத்துக்கள் இடையில்
கிறுக்கல் ஆகிறது

தயவு செய்து கோவத்தோடு
எனை விட்டு பிரியாதே
என் கோவத்தை யாரிடமாவது
காட்ட வேண்டி வந்துவிடும்

நம் முதல் சந்திப்பில்
காதல் வரவில்லை
நம் முதல் பிரிவில்த்தான்
காதல் வந்தது

இன்று காதலர்தினமாம்
யாரையாவது காதலிக்க விடுகிறாயா
நேற்றே வந்து விட்டாய்

-யாழ் அகத்தியன்

எத்தனை அருமையான வரிகள்


பிடித்ததும் கிடைத்ததும் என்னும் தலைப்பில் எழுதிய கிறுக்கல்களைப் படித்தால், இன்னும் படிக்கவேண்டும் என்னும் ஆர்வத்தை உண்டாக்கும் .


பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது

கிடைத்தபின் பிடிப்பதில்லை.

கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது

பிடித்தபின் நிலைப்பதில்லை!!!



நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது

நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.

நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்

நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!


இந்த தளத்திற்கு உரியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரிகள் அருமையாக எழுதி உள்ளதைக் காண முடியும்.


நேசம் என்னும் தலைப்பில் MEERAN MYDEEN அவர்களின் வரிகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

செடியின் முற்கள்
ஒரு பக்கம்
அழகிய ரோஜா
நிற்கும் மறு பக்கம்

பலா தோளின் முற்கள்
புற பக்கம்
இனிமை சுளா
இருக்கும் அக பக்கம்

கொட்டும் தேனீக்கள்
ஒரு பக்கம்
தித்திக்கும் தேன்
இருக்கும் அக பக்கம்

என் கருத்து வெளிபாடோ
சுடும் பக்கம்
என் அன்பு மனம்
ஏங்குவதோ
சுற்றும் உன் பக்கம்!

கிறுக்கல்களே நெஞ்சத்தை தைக்கின்றன. மறுப்பதற்கு இல்லை.

வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள
சில சமயங்களில் கிறுக்கி கிறுக்கல்களே
கீழே உள்ளவை.

வட்டப்பாதை ( orbit)




பெண்ணே
நீ என்
விழியில்
விழுந்த நாள் முதலாய்
என் வாழ்க்கை கூட
சூரியனாய்
சுற்றும்
வட்டப்பாதையானது
வதைக்காதே, உன்
வார்த்தைகளால் என்
வாட்டத்தை கொஞ்சம்
விலக்கிடு பெண்ணே


இருவழிப்பாதை(Two-way traffic)


பயணிக்கும் பாதை கூட
இருவழிப்பாதை என்றால்தான்
இனிக்கின்றது
இல்லையெனில்
இயங்க மறுக்கிறது
ஒருவழிப்பாதை என்றால்
ஒருவர் கூட பயணிப்பதில்லை.
திரும்பி வர வழி இல்லையெனில்
திரும்பி கூட பார்க்க மாட்டோம்
இழப்பிற்கும்
இறப்பிற்கும்
இடிந்து விடுவதா ?
வாழ்க்கை என்பது
இன்பமும் துன்பமும்
இணைந்து என்று நினைத்தால்
இறப்பை தேடும்
ஒருவழிப்பாதையை
ஒரு பொழுதும் தேர்ந்து எடுக்க மாட்டோம்.
வாழ்க்கை என்னும்
இருவழிப்பாதையில் பயணிப்போம்.

சொல் அகராதி


1.orbit - வட்டப்பாதை
2.two way traffic - இருவழிப்பாதை
3.one way traffic - ஒருவழிப்பாதை

தமிழர்களின் அறிவு திரையரங்குகளின் அருகில் !




" அண்ணா சாலையில்
ஒரு நிறுவன முகவரி
கேட்டார் ஒருவர்.....
" மத்திய நூலகக்கட்டிடம்
அருகில் " என்றேன்
"ஒ ........ ஆனந்த தியேட்டர்
அருகிலா ? " என்றார்
தமிழர்களின் அறிவு
திரையரங்குகளின் அருகில் ! "


( படித்ததில் பிடித்தது - சொல்கேளான் ( ஏ.வி. கிரி ) அவர்களின் வரிகள் )

பலாப்பழமும் பலகையும் - 2

சேவியரின் இணையக்காதல் என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் இந்த வரிகளைப் படித்துப் பார்த்தேன். மீண்டும் ஒருமுறை

மடிமீது தலைசாய்த்து
மகரந்தங்கள் மயங்காமல்,
விசைப்பலகையில் விரல் இருத்தி
காதலை நிலை நிறுத்தல்
சாத்தியமிங்கே.


கடற்கரையில் கால் படுவதை விட
கணிணிப் பலகையில்
விரல் தொடுவதையே
விரும்புகிறது கல்லூரி வட்டம்.


இதை மீண்டும் மீண்டும் படிக்கும்பொழுது, மனம் " கணினிப் பலகை " என்பதை ஏன் " computer monitor " என்பதற்கு இணையாக எடுத்துக்கொள்கூடாதா என்று எண்ணியது. இது தொடர்ப்பாக என்னுள் தோன்றிய எண்ண அலையின்
பதிவே இது.


மனையில்
மழலையும்
மனைவியும் அமையப்பெற்றும்
கண்களை
கணினிப்பலகைக்கு
கடன் கொடுப்பவர்களையும்,
விரல்களை
விசைப்பலகைக்கும்
வாடகைக்கு
விடுகின்றவார்களையும் காணும்பொழுது
மடையர்கள் என்று தான்
மனம் உரைக்க தோன்றுகிறது.


computer monitor எனபதை கணினித்திரை என்றும் அழைக்கின்றோம்.
இருந்தப்பொழுதும்
computer monitor - கணினிப்பலகை
Key board - விசைப்பலகை
என்று சொல்லும்பொழுது ஒரு ஒழுங்கு இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது



computer screen என்னும் எண்ணத்தில் தான் கணினித்திரை என்று அழைக்க ஆரம்பித்தோம்.
monitor என்பது liquid crystal display (LCD) அளவிற்கு வந்துவிட்டக் காரணத்தால்
computer monitor என்பதை கணினிப்பலகை அழைப்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது

திரை (screen) என்றயுடன் நம் நினைவிற்கு வருவது திரையரங்குதான். திரைப்படங்களைத் திரையில் கண்டுக்களிக்கிறோம். Theatre screen என்பதை திரைப்பலகை என்றும் விளிக்கலாமே




கல்வி என்றயுடன் கண்முன்னே வந்து நிற்பது அதுதான் கரும்பலகை ( Blackboard )



கரும்பலகை என்றயுடன் பலரை நினைவுப்பயணத்திற்கு பின்நோக்கி இட்டுச்செல்லும்.

இப்படி எல்லாம் சொற்களை அமைத்துக் கொள்ளலாம்

இது என்னுடைய எண்ண அலைகள் தான்.

சொல் அகராதி


1.keyboard - விசைப் பலகை, தட்டச்சுப் பலகை
2.computer monitor - கணினிப்பலகை, கணினித்திரை
3.Theatre screen - திரைப்பலகை
4.Blackboard - கரும்பலகை
5.cinema Theatre - திரையரங்கு

இதர என்பது தமிழ்ச் சொல்லா

ஆட்சிமொழி ஆணையத்தில், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது,
" இதர " என்னும் சொல்லைப் பயன்படுத்தலாமா என்னும் கேள்வி எழுந்தது.அந்தச் சொல் வடசொல்லாக இருப்பதால் , அதனை அறவே விலக்க வேண்டும் என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர். அப்போது, " இது தமிழ்ச்சொல்தான் , ' இதுதவிர ' என்னும் சொல்லே
" இதர " என்று சுருங்கியுள்ளது " என்று சொன்னேன். இராமலிங்கனார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.சமயம் நேரும் போதெல்லாம் நண்பர்களுக்கு இதனை மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறி என்னைப் பாராட்டி மகிழ்வார்.

( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்




வாக்காளர் ஒருவரை " சேட்ரச்ச்ரில் ' தூக்கி வந்தார்கள் என்ற செய்தியை நாளேடுகள் நமக்குத் தந்து மகிழ்கின்றன ! இந்த " stretcher " என்னும் சொல்லுக்குத் தமிழ் கிடையாதா ? அகராதியைப் புரட்டிப் பார்த்தால், இரண்டு மொழிபெயர்ப்புகள்
கொடுக்கப் பெற்றுள்ளன. ஒன்று " தூக்குக் கட்டில் " இன்னொன்று " தூக்குப் படுக்கை " இரண்டாவது மொழிபெயர்ப்பு இனிமையாகவே இருக்கிறது. இதனைப் பயன்படுத்துவதில் தமிழனுக்கு ஏற்படும் தயக்கம் என்னவோ ? " தூக்குக் கட்டில் " ,
" தூக்குப் படுக்கை " என்னும் மொழிபெயர்ப்புகள் அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும் என்பதை நினைவுபடுத்துவது போலல்லவா தோன்றுகிறது ! அவனுடைய அச்சம் அகலுமாறு, இந்த மொழிபெயர்ப்பைச் சிறிது செப்பனிடலாமே !

" தூக்குப் படுக்கையில் தூக்கிவந்தார்கள் " என்று சொல்வதற்குப் பதிலாக " கைப்படுக்கையில் தூக்கி வந்தார்கள் " என்று சொல்லிப் பார்ப்போம், " கைப்படுக்கை " என்னும் பெயர் பழந்தமிழ்ச் சொற்களின் மரபிற்கு ஒத்துவருவதை அறிந்து இன்புறலாம்.

( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

சொல் அகராதி


1. news paper - செய்தித்தாள், நாளேடு
2. voter - வாக்காளர்
3. dictionary - அகராதி
4. stretcher - கைப்படுக்கை

௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்


இனிய மொழிபெயர்ப்புகளை யாரோ சிலர்தாம் செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. மொழிபெயர்ப்புக்குப் பழுத்த அனுபவந் தேவை என்பது உண்மைதான். ஆயினும் பலகாலும் முயன்றும் நமக்குத் தெரியாத ஒன்றைப் பிறர் மிக எளிதில் சொல்லிவிடுவதைப் பார்க்கலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது.
தோற்றப் பொலிவுடையாரெல்லாம் ஏற்றமுடையார் என்று எண்ணிவிட முடியாது. வாடகை இயங்கிகளை நாம் அன்றாடம் பார்க்கின்றோம்." State Permit " என்னுந் தொடரை வாடகை இயங்கியாளர்கள் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளனர் என்பதைப் பார்க்கலாம். ஒருவர் " தமிழகம் முழுவதும் " என்று மொழி பெயர்த்துள்ளார். இன்னொருவர் " தமிழகம் எங்கும் " என்று எழுதியுள்ளார். மூன்றாமவர் செய்துள்ள மொழிபெயர்ப்பைக் கண்டால் விளப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே தோன்றும்.

" மாநில உரிமை " என்று எழுதியுள்ளார். வண்டியில் எழுதப்பட்டுள்ள அந்தச் சொற்கள் எழுதப்பட்டுள்ள சூழ்நிலையில், பளிச்சென்று மின்னிப் பொருளை விளக்குகின்றன. " State Permit " என்னுஞ் சொற்களை அரை வட்டமாக ஆங்கிலத்தில் அழகுற எழுதுவார்கள்.அதே போலப் பிறை நிலாத் தோற்றத்தை " மாநில உரிமை " தந்து நிற்பதைக் கண்டு மகிழலாம் !
" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் ' என்றாரல்லவா உலகப்பெரியார் வள்ளுவர். அப்பொய்யா மொழியை நாம் நினைவுகூர்தல் வேண்டும்

மொழிபெயர்ப்பிற்குச் சிறந்த மொழியறிவு வேண்டும். இரண்டாவதாக மொழியார்வம் வேண்டும். மூன்றாவதாக முயற்சியும் பயிற்சியும் வேண்டும்.

" முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் "

என்றார் உலகப்பேரொளி வள்ளுவர். முயற்சி இருந்தால் நமக்குச் செல்வம் கிடைக்கும். அதுதான் நற்றமிழ்ச் செல்வம். மொழிபெயர்ப்பு ஒரு இனிய கலை. உலக நாடுகளை இணைக்கும் பாலம். அக்கலையைப் போற்றி வளர்த்தல் நம் கடமை.

( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

dondu(#11168674346665545885) said:
மாநில உரிமம் என்று கூறலாமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்


திகழ்மிளிர் said:
/மாநில உரிமம் என்று கூறலாமோ?/

நான் இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்
எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.
" மாநில உரிமை " என்பதை தனிச்சொல்லாக பயன்படுத்தும்பொழுது
சிக்கலில்லை. அதுவே சொற் தொடரில்
எடுத்து ஆளும்பொழுது சற்று கடினம்
உள்ளதை உணர்கிறேன்.


திகழ்மிளிர் said:
உரிமம் என்பதை license
என்னும் பொருளில் கையாளுகின்றோம்
இருந்தப்பொழுதும்
தங்கள் சொல்லுவது எனக்கு பொருத்தமாக தோன்றுவதால்

state permit என்பதை மாநில உரிமம்
மாற்றிக் கொள்கிறேன்.

மீண்டும்
ஒரு முறை
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றிகள்



சொல் அகராதி


1.State Permit - மாநில உரிமம்

௰௧.பலாப்பழமும் பலகையும் - 1


பழம் என்ற உடன் நம் அனைவரின் நினைவற்கு வருவது வாழைப்பழம் தான்.வாழையின் வரலாற்றைச் சொல்லும்பொழுது அது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது என்று கூறப்படும்.
மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் என்றால் அது பலாப்பழமாகும்.இதனுடைய வரலாற்றைப் பார்த்தால் குறிப்பாக இந்தியா என்று சொல்லுவது உண்டு.மேலும் மரப்பலகைகள்
பலா மரத்திலிருந்து வெட்டி எடுத்துச் செய்யப்பட்ட காரணத்தால் அது பலகை என்று வந்ததாக
சொல்லுவது உண்டு


பலா - பலகை

இப்படி எல்லாம் மொழி ஆய்வுகள் செல்லுவது உண்டு. இந்தப் பலகை என்னும் சொல் தமிழுக்கு தான் எத்தனை கலைச்சொற்களை உருவாக்க காரணமாகி இருக்கிறது.

எடுத்துக்காட்டாக,

கணினித் துறையில் keyboard என்பதை தட்டுத் தடுமாறி தட்டச்சுப் பலகை என்று மொழியாக்கம் செய்தோம்.இன்று அதைவிட அருமையான சொல் ஆக விசைப் பலகை என்று அமைத்துக் கொண்டோம்.



இன்னும் இதைவிட கணினிப் பலகை என்று மொழியாக்கம் செய்வதைக் காணும்பொழுது மகிழ்ச்சியில் மனம் திழைக்கிறது.

சேவியரின் இணையக்காதல் என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் இந்த வரிகளைப் படித்துப் பாருங்கள், உண்டாகும் உவகையே தனிந்தான்.

மடிமீது தலைசாய்த்து
மகரந்தங்கள் மயங்காமல்,
விசைப்பலகையில் விரல் இருத்தி
காதலை நிலை நிறுத்தல்
சாத்தியமிங்கே.


கடற்கரையில் கால் படுவதை விட
கணிணிப் பலகையில்
விரல் தொடுவதையே
விரும்புகிறது கல்லூரி வட்டம்.


ஒன்றைத் திரும்ப திரும்ப சொல்லும்பொழுது அகத்தில் அழியாத கோலமாய் பதிவதைக் காணலாம்.அப்படிப் பட்ட செயலைச் செய்வது தான் Advertising . தமிழில் விளம்புதல் என்றால் ஒன்றைத் திரும்ப திரும்ப சொல்லுவது அல்லது அழுத்தம் திருத்தமாக சொல்லுவது என்று பொருள்.அதனால் தான் Advertising என்றால் விளம்பரம் என்று வரையறுத்துக் கொண்டோம்.
Hoardings என்றயுடன் அசைந்துப் போகாமல் விளம்பரப் பலகை என்று வண்ணம் தீட்டிக் கொண்டோம்.

இப்படி எல்லாம் தமிழை வளர்த்தால், இன்னல்கள் எல்லாம் இன்பங்களாக அமைந்துவிடும்.
தடுமாற்றங்கள் எல்லாம் தேவையில்லை, மனமாற்றங்களே போதும். மங்காத தமிழ் மலர.





சொல் அகராதி


1.fruit - பழம்
2.Banana - வாழைப்பழம்
3.History - வரலாறு
4.Tree - மரம்
5.Jackfruit - பலாப்பழம்
6.Plank - பலகை
7.keyboard - விசைப் பலகை, தட்டச்சுப் பலகை
8.Advertising - விளம்பரம்
9.Hoardings - விளம்பரப் பலகை

௰.சீம்பூ , சென்னை,சில சிந்தனைகள்

சிகரம் ,சிரம் என்றால் என்ன பொருள் என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான்.
இந்தச் சொற்களிலிருந்து உருவான சொற்கள் தான் எத்தனை ? .
1.சீப்பு- தலை முடியை வாரவதற்கு
2.சவுரி -செயற்கை முடி
3.சீக்காய்- தலை முடியை பாதுகாக்க உதவுவது
4.சிகையலங்காரம் -தலை அலங்காரம்
5.சீம்பூ -தலை முடியை பூ போன்று வைப்பது ( Shampoo )

இப்படி உருவாகும் சொற்கள் உருவாக்கும் இன்பமே தனிந்தான்.
வேரிலிருந்து செடி வளர்ந்து காய் வந்து, கனி கொடுக்கும்பொழுது தான் சுவையும் அதிகமாக இருக்கும்.சிகரம் என்ற பொழுது நினைவிற்கு வரும் ஒரு சொல் தான் " சென்னி ". அது தலை, உச்சி என்று பொருளில் இலக்கியங்களில் வரும்.சென்னை என்று பெயரிட்டப் போது என் நினைவிற்கு வந்து இது தான். சென்னி என்றால் தலை என்னும் பொழுது , மாநிலத்தின்
தலைநகரை சென்னை என்று தான் அழைக்கவேண்டும்.

இந்தப் பகுதியை ஆண்டு வந்த நாயக்க மன்னன் தன் தந்தையின் நினைவாக இட்டப் பெயர் தான் "சின்னப்பட்டணம்" சென்னப் பட்டணமாகி, சென்னைப் பட்டணம் என்றாயிற்று என்று
சென்னை பெயர் வந்தக்கதை என்று படித்தது உண்டு.

" மதராசு " என்ற சொல்லுக்கு ஒரு விளக்கம் கூறுவது உண்டு.கோட்டை கொத்தளங்களுடன்
இருந்தது பகுதி என்பதாலும், தமிழில் கோட்டை என்பதற்கு மதில் என்ற சொல்லுண்டு. இந்தப் பகுதி தெலுங்குப் பேசும் மக்கள் வாழ்ந்தாலும், மதில் என்பது தெலுங்கில் மதுரு என்று
அழைக்கப் படும்.அதிலிருந்து மதராசு என்று வந்தது என்று கூட சொல்லுவது உண்டு.

எனக்கு சென்னி என்றால் தலை என்னும் பொழுது , மாநிலத்தின் தலைநகரை சென்னை என்று தான் வந்திருக்க வேண்டும் என்பதே சரி என்று தோன்றுகிறது.

௯.சந்தியும் சந்திப்பும்



ஓற்றுப் பிழையைச் சந்திப் பிழை என்றும் வழங்குவர். தன் காதல் கடித்தில் நேர்ந்துவிட்ட ஒரு சந்திப் பிழை குறித்துக் காதலன் ஒருவன் தன் காதலிக்கு எழுதும்
கடிதத்தை / கவிதையைக் கீழே காணலாம்.

"அன்பே !
உன் தந்தை
தமிழாசிரியராய் இருக்கத்
தகுதியே இல்லாதவர்
' ஆருயிர் காதலிக்கு '
என்று தொடங்கி
நான் உனக்கு எழுதிய காதல் கடிதத்தைக்
கள்ளத் தனமாய்ப் படித்தவர்
' சந்திப் பிழை '
என்றால் சரியென்றிருப்பேன்.
ஆனால், நம்
' சந்திப்பே ' அல்லவா பிழை என்கிறார் ? "

" ஆருயிர்க் காதலிக்கு " என்று ஒற்றிட்டு எழுத வேண்டிய தொடரை * " ஆருயிர் காதலிக்கு " என்று நான் எழுதியது தவறு தான் ; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் , பிழையான தமிழைத் திருத்த வேண்டி தமிழாசிரியராகிய உன் தந்தை நம் காதலுக்குத் தடை போடுகிறாரே ! " என்று எண்ணும் இளைஞனின் உள்ளத்தை/ ஏளனத்தை/ நையாண்டியை இந்தப் புதுக்கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.

( மருதூர் அரங்கராசன் எழுதிய நூலிருந்து )

இந்த வரிகளைப் படிக்கும்பொழுதே முடிந்தவரை எழுத்துப் பிழையின்றி எழுதவேண்டும் என்னும் எண்ணத்தை என்னுள் விதைத்தது .
இந்தக் கவிதை தமிழின் மேல் ஒரு ஆர்வத்தை உண்டாக்குவதையும் உணர முடிகிறது.

௮.கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 1

ஊடகங்களையும் செய்தித்தாள்களையும் பார்க்கும்பொழுதும் ,படிக்கையிலும் உள்ளம் உடைந்துவிடுகிறது, ஆங்கிலச்சொற்களை இடையே சொல்லும் பழக்கத்தைப் பார்க்கையில். சில சொற்களை நினைவுப்படுவதற்காக சில சமயங்களில் இப்படிதான் கிறுக்கிக்கொண்டு இருப்பேன்.

ஓடு பாதை ( Runway )



வாழ்க்கை என்னும்
விமானம்
நம்பிக்கை என்னும்
ஓடு பாதையில்தான்
ஒட வேண்டும்.

தற்கொலை ( Suicide )

தற்கொலை என்பது
தன்னம்பிக்கையற்றவர்களின்
தாய்மொழி


நாடாளுமன்றம் ( Parliament )




பார்வையாளர்கள் இல்லாமலே
பணம் ஈட்ட முடியும் என்பதால்
நுழைந்தார்கள் எங்கள்
நடிகர்கள்
நாடாளுமன்றத்திற்குள்
நாற்காலி கனவுகளுடன்

குறிப்பு ;

முதலில் பாராளுமன்றம் ( Parliament ) என்ற ஓசை ஒத்த சொல் போல் உருவாகி,
பின் நாடாளுமன்றம் என்று வளர்ச்சி அடைந்துள்ளதைப் பார்க்கும்பொழுது முயன்றால் நல்ல சொற்களை உருவாக்க முடியும் என்பதை உணர்த்துகிறது.


சொல் அகராதி

1. media - ஊடகம்
2. Newspaper - செய்தித்தாள்
3. Runway - ஓடு பாதை
4. Life - வாழ்க்கை
5. flight - விமானம்
6. mother tongue - தாய்மொழி
7.
Parliament - நாடாளுமன்றம் , பாராளுமன்றம்
8. visitors - பார்வையாளர்கள்
9. actors - நடிகர்கள்
10. chair - இருக்கை , நாற்காலி , கதிரை
11. dreams - கனவுகள்

௭.குறும் பேழை ( Brief case )



( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )


கையில் பையை எடுத்துச் செல்கின்றோம். "கை"யும் ஓரெழுத்து "பை " யும் ஓரெழுத்து. இந்தப் புதுமைக்காலத்திலே, வகை வகையான பைகள் வந்து குவிகின்றன. அவற்றின் பெயர்களையெல்லாம் தொகுத்து, தமிழ்ப்படுத்திப் பார்த்தால், அரிய ஆராய்ச்சியாகத் திகழும் என்பதில் ஜயமில்லை ! எனினும் பைகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். துணிப் பையும் , தோல்பையும்
முதலிரண்டு வகைகளாகும். மூன்றாவது வகைதான் Brief case .


நகைப்பெட்டியை நகைப்பேழை என்று சொல்லும் போது நம்முடைய முகமும் அகமும் மலர்கின்றன்.

Brief case என்பது சிறிய பெட்டி என்பதே பொருளாகும்.


குறுநடை, குறுஞ்சிரிப்பு, குறுநகை என்னும் சொல்லுள்ள குறும் என்பதையும்

பேழை என்ற சொல்லையும் இணைக்கும்பொழுது அருமையான அழகான தமிழ்ச்சொல் பிறக்கிறது.

கடைசியாக கீதா அவர்களின் கவிதை

மனம் என்னும் தலைப்பில் ( கீதாவின் கிறுக்கல்கள்/http://geeths.info/archives/16/)





மனம் என்பதோர் மந்திரப் பேழை
என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை
நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை
அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை
அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும்
அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும்
இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்?
இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்?
இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்?
அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்

புதையல்